தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச இருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த நிலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த 17 ஆம் தேதி சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, “வெள்ளத்தால் 49,757 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர். நிவாரணமாக ரூபாய் 2,079 கோடி வழங்க வேண்டும். உடனடியாக 550 கோடியை விடுவிக்க வேண்டும். மொத்தமாக 2,600 கோடி ரூபாய் நிவாரணம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்பிறகு மத்திய ஆய்வு குழுவினர் வெள்ளச் சேதம் குறித்து கடந்த வாரம் தமிழகம் வந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். ஆனால் மத்திய குழுவினர் ஆய்வு செய்து ஒரு வாரம் கடந்த பின்னரும் நிவாரண உதவி குறித்து எந்த அறிவிப்பும் மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை. இதனைக் கண்டிக்கும் விதமாகச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி.ஆர்.பாலு, ''தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி வரல. இத்தனைக்கும் மத்தியக் குழு வந்து பார்த்தார்கள். 10 நாள் ஆச்சு ஒரு பைசாகூட வந்து சேரல. கையில பணம் இல்லாம இருக்கிற நிதியை வைத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகிறார்கள். தினமும் வெள்ளத்தைப் போய் பார்க்கிறார் முதல்வர். இதையெல்லாம் ஒன்றிய அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. உரிய நிதியை இன்னும் வழங்கவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என்றார்.