Skip to main content

நாகூர் தர்கா பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

Chief Minister Palanisamy visited the Nagore Dargah

 

புயல், மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகூர் தர்கா குளத்தின் சேதமடைந்த பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

 

‘புரவி’ புயல் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களையும் மூழ்கடித்திருக்கிறது. கொட்டித்தீர்த்த கன மழையினால் விவசாயமும், குடிசை வீடுகளும் சேதமடைந்துள்ளது. அந்தவகையில், உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் சுற்றுச்சுவரும் கீழ்க்கரை சாலையும் சேதம் அடைந்தது. 

 

இந்தநிலையில், தர்கா குளத்தின் சேதமடைந்த பகுதிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது இதுவரை  எடுக்கப்பட்டிருக்கக் கூடிய சீரமைப்பு பணிகள் குறித்து அங்கு நின்ற அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

 

நாகூர் தர்கா வந்த தமிழக முதல்வருக்கு, தர்கா நிர்வாகத்தின் சார்பாகவும், நாகூர் தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் உள்ளிட்ட சாஹிபுமார்கள் சார்பாகவும், மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பைப் பெற்றுக்கொண்டு நாகூர் ஆண்டவர் சன்னதிக்கு வந்த தமிழக முதல்வரை இஸ்லாமியர்கள் தொப்பி அணிவித்து சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். 

 

பின்னர் தர்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாஹிப் தலைமையில் துவா ஓதப்பட்டது. முதல்வரின் வருகைக்காக நாகூர் தர்கா முன்பு மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டிருந்தது. 

 

அங்கிருந்து புறப்பட்ட  முதல்வர் பழனிச்சாமி கருங்கன்னி, பழங்கள்ளிமேடு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் பாதிப்புகளையும், சேதமடைந்த வீடுகளையும் ஆய்வுசெய்யவுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்