காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10.01.2025 அன்று தொடங்கியது. 17/01/2025 அன்று வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. திமுக வேட்பாளர் ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கி இருக்கும் நிலையில் நேற்று திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மா.கி.சீதாலட்சுமி மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பொங்கல் விடுமுறை காரணத்தால் மூன்று தினங்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. மொத்தமாக 58 வேட்பாளர்கள் சார்பில் 65 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் அலுவலர் மணீஷ் தெரிவித்து இருந்தார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் தன்னிச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் என 58 பேர் பங்குபெற்றுள்ளனர். வேட்புமனு பரிசீலனை முடிவில் எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டது நிராகரிக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
நாளை 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இருபதாம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் உள்ளது. எனவே 20ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வமாக ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் எத்தனை வேட்பாளர்கள் உள்ளனர் என்பது தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும்.