நேற்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர். அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும்'' என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதோடு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக அமைச்சர்கள் சிலரும் அம்பேத்கர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 'சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம்; சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன்; சக மனிதர்களிடம் வாழ்நாள் முழுவதும் சமத்துவத்தைக் கடைபிடிப்பேன்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழியை வாசிக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.