காலமும், கலச்சாரமும் மாறியதன் விளைவாக மனிதன் தன்னுடைய பழமையையும், பாரம்பரியத்தையும் மறந்து விட்டான். அதில் ஒன்று தான் திருமணம் நிகழ்ச்சிகள் முன்பு திருமணங்கள் வீட்டு முற்றத்தில் பந்தல் போட்டு வாழைக்குலைகள் நட்டு சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வீட்டு விசேஷங்களை பரிமாறி கொள்வார்கள். மேலும் அந்த காலங்களில் பல தூரம் நடந்து சென்று திருமணம் செய்தார்கள். அதன் பிறகு மாட்டு வண்டியிலும், பின்னர் அம்பாசிடர் காரிலும் சென்று திருமணம் செய்தார்கள். தற்போது நவீன காலத்தில் சொகுசு காரில் மாப்பிள்ளை போய் திருமணம் செய்வதை தான் இப்போது நாம் பார்க்கிறோம்.
இந்த நிலையில் தான் குமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள சேக்கல் பகுதியை சேர்ந்த ஜெபசாலமேனுக்கு திற்பரப்பை சேர்ந்த ஆஞ்சலா மெர்சியை பெற்றோர்கள் திருமணம் பேசி முடித்து வைத்தனர். தன்னுடைய திருமணத்தை பழமையும், பாரம்பரியமும் மாறாமல் நடத்த ஜெபசாலிமோனும் ஆஞ்சலா மெர்சியும் விரும்பினார்கள். அதன்படி நேற்று நடந்த இவர்களின் திருமணத்தின் போது ஜெபசாலிமோன் மாட்டு வண்டியில் சென்று ஆஞ்சலா மெர்சியை கரம் பிடிக்க முடிவு செய்தார்.
இதற்கு அவரின் பெற்றோர்களும் பச்சை கொடி காட்டினார்கள். அதனையடுத்து நெட்டா பகுதியை சேர்ந்த ஒருவரின் மாட்டு வண்டியை வாடகைக்கு எடுத்து அதில் வாழைக்குலையும் மற்றும் பூக்களால் அலங்கரித்து முத்துகுடை பிடித்த படியாக திருமணம் நடந்த மாஞ்சாங்கோணம் புனித குழந்தை தெரசாள் ஆலயத்திற்கு வந்தார். அப்போது அவரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சாலைகளில் நின்றவர்களை பார்த்து கையசைத்தபடி வந்தார் ஜெபசாலிமோன். பின்னர் திருமணம் முடிந்ததும் வெளியே வந்த மணமக்கள் மாட்டு வண்டியில் ஏறி மணமகனின் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது அங்கு நின்ற உறவினர்களும், நண்பர்களும், மணமக்களுக்கு உற்சாகம் பொங்க கைத்தட்டி வாழ்த்து சொன்னார்கள்.
இது பற்றி மணமக்கள் கூறும்போது பழமையும், பாரம்பரியத்தையும் மறந்ததால் இன்றைக்கு இளைய தலைமுறையினர் மட்டுமல்லால் நாடே அல்லோலம் பட்டு கொண்டு இருக்கிறது. அதோடு கால்நடைகளையும் மாட்டு வண்டிகள் பயணத்தையும் மறந்ததால் விவசாயத்தையும் இழந்து சுற்றுப்புற சூழலில் ஏற்பட்டுள்ள மாசுகளால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர் என்றனர்.