கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே 336 மீட்டரில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. அதில், “தற்போதுள்ள அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பு கருதி புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணை கட்டிய பின்னர் தமிழகத்திற்கு தற்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த விண்ணப்பம் தொடர்பாக வரும் 28 ஆம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய அணை வண்டிப்பெரியாரிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் முல்லைப் பெரியாரில் புதிய அணை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக இடிக்க, மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டப் போராட்டம் நடத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அணையில் முழுமையான ஆய்வுகள் மேற்கொண்டபின், முதலில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது. மேலும், அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பிலே குறிப்பிட்டிருந்தது. ஆனால், 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த அப்போதைய மைனாரிட்டி திமுக அரசு முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தி, தண்ணீர் தேக்கி வைக்கும் அளவை 152 அடியாக உயர்த்த எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
மீண்டும், 2011 இல் ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, கேரள அரசின் புதிய சட்டங்களை எதிர்த்து, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, 7.5.2014 அன்று அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதற்கும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், கேரள அரசு எவ்வித குறுக்கீடும் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்ற தீர்ப்பைப் பெற்றார். அதன்படி, வனத் துறை மற்றும் சுற்றுச் சூழல் ஒப்புதல் தேவைப்படாத பணிகளான, பிரதான அணையில், கட்டி முடிக்கப்படாமல் இருந்த 20 மீட்டர் நீள முன்பக்க தடுப்புச் சுவரின் உயரம் 158 அடியில் இருந்து 160 அடிக்கு உயர்த்தும் பணி ஏப்ரல் 2017-லும், முல்லைப் பெரியாறு அணை மற்றும் சிற்றணையின் இடையே உள்ள மண்குன்றின் முன் பகுதியை 165 அடி உயரம் வரை பலப்படுத்தும் பணி அக்டோபர் 2017லும், நீர்வழிந்தோடியையும் மற்றும் அணையின் பக்கச் சுவரையும் 165 அடி உயர்த்தும் பணிகளும் முடிக்கப்பட்டன.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதாவின் அரசில் பேபி அணை மற்றும் அணைப் பகுதிகளை பலப்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும், பேபி அணையை பலப்படுத்தும் கருவிகளைப் பொருத்துவதற்கு 23 மரங்களை வெட்ட மத்திய மற்றும் கேரள வனத் துறைகளிடமிருந்து அனுமதி கோரப்பட்டது. வனத் துறையின் அனுமதியைப் பெற கேரள அரசு தடையாக இருந்தது. இதனால் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்றுவரை நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து நான், முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியிடம் நேரடியாகவும், மத்திய நீர்வளக் குழுமம், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை, கேரள அரசு, கேரள வனத் துறை என்று அனைவருக்கும் பேபி அணையை பலப்படுத்த, தமிழக பொதுப்பணித் துறைக்கு அனுமதி வழங்குமாறு கடிதங்கள் மூலம் வலியுறுத்தினேன். ஆனால், கேரள வனத் துறையின் அனுமதி வழங்கப்படாததால், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் தொடர முடியவில்லை.
இந்நிலையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021 இல் திமுக அரசு பொறுப்பேற்றது. 2021 அக்டோபர் மாதம் பருவ மழையின் போது பெய்த கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சுமார் 138.85 அடியாக இருக்கும்போதே கேரள அரசின் அமைச்சர்கள் தன்னிச்சையாக அணையின் ஷட்டர்களைத் திறந்து நீரை வெளியேற்றினர். தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில், தமிழக அரசின் அனுமதியின்றி கடந்த 29.10.2021 அன்று கேரள அமைச்சர்கள் முன்னிலையில், முல்லைப் பெரியாறு அணையை திறந்துவிட்டது தவறு என்று நான் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாக அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்தேன். மேலும் 9.11.2021 அன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே இருக்கும் 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை 2021 அக்டோபர் மாதம் அனுமதி வழங்கியதாகவும், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு அரசு பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. மேலும், அதில் அணையை வலுப்படுத்த கட்டுமானப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பெரியாறு அணைக்கு செல்லும் பாதையை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த அறிக்கை வெளிவந்த உடனேயே கேரள முதலமைச்சர் அதிர்ச்சியடைந்ததாகவும், மரம் வெட்ட யாரும் உத்தரவிடவில்லை என்றும், தமிழக அரசுக்கு அனுமதி அளித்து கடிதம் எழுதியிருப்பின், அந்த வனத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன. மேலும், பேபி அணையில் மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதிக் கடிதத்தை ரத்து செய்வதாக கேரள வனத் துறை அமைச்சர் அறிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் திமுக அரசின் செயலற்ற தன்மையால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், குடிநீருக்காக நம்பி உள்ள பல மாவட்ட மக்களும் இன்றைக்கு வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். இனியாவது திமுக அரசு கூட்டணிக் கட்சி என்று பாராமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுத்து கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவும், முல்லைப் பெரியாறு அணையில், உச்சநீதிமன்ற ஆணையின்படி பேபி அணையைப் பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.