டிக் டாக் செயலிக்கு விதித்திருந்த தடையை நிபந்தனையுடன் நீக்கியுள்ளது மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
அண்மையில் டிக் டாக் செயலியை தடைசெய்யகோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தொடுத்த வழக்கின் விசாரணையில் டிக்டாக் செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடைவிதித்திருந்தது. அந்த வழக்கின் தொடர் விசாரணையில் டிக் டாக் செயலியை இனி தரவிறக்கம் செய்ய தடை விதித்து மத்திய அரசிற்கு உத்தரவிட்டிருந்ததது நீதிமன்றம்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டிக் டாக் தரப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பிறகு 6 மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. ஆபாசமாக வீடியோ பதிவிட்டால் தனாகவே அந்த வீடியோவை செயலி அகற்றிவிடும். இந்தியாவின் கருத்துரிமை விதிகளுக்கு உட்பட்டுத்தான் டிக் டாக் செயல்பட்டு வருகிறது. டிக் டாக்கை தடை செய்வதால் சுமார் 250 நேரடி பணியாளர்களும், 5000 மறைமுக பணியாளர்களும் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது என வாதிட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் சமூக சீர்கேட்டையும், ஆபாசத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான வீடியோக்களை பதிவிறக்கம் செய்யமாட்டோம் என உறுதிமொழி அளிக்க டிக் டாக் தரப்பிடம் கோரினர். அதன்பின் டிக் டாக் நிறுவனம் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து நிபந்தனையுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.