வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே தனியார் பேருந்து ஒன்று, திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த பேருந்து வாணியம்பாடி நகர பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் நெருங்கி வந்த போது பேருந்து நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை, அதே இடத்தில் நிறுத்தி கீழே இறங்கியுள்ளார்.
பேருந்து ஏன் திடீரென நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கிப்போனார் என பயணிகள் முழிக்கும்போது பேருந்தின் அடிப்பாகத்தில் இருந்து புகை கிளம்பி பேருந்துக்குள் பரவியுள்ளது. பேருந்து தீ பிடித்தது என்று தெரிந்து பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு கீழே இறங்கினர். இதனை பார்த்த அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீ அணைக்கும் உபகரணங்களை விரைந்து எடுத்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கே வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும் தீயணைப்பு துறையினர் காலதாமதமாக வந்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் வாகன சட்டத்தின்படி ஒவ்வொரு பேருந்துகளிலும் தீ அணைப்பு உபகரங்கள் கட்டாயம் வைக்க வேண்டும். ஆனால் விபத்து நடந்த பேருந்தில் இது போன்று உபகரணங்கள் ஏதும் இல்லை. இந்த பேருந்தை ஆய்வு செய்த வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என தெரிந்தது.
இனிமேலாவது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பேருந்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வாகனங்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.