வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என 28 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆகஸ்ட் 5ந் தேதி வாக்குபதிவு என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி.பழனிச்சாமி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.
![Election stance - CMC management in dispute!](http://image.nakkheeran.in/cdn/farfuture/iLmi9Vyz8zFu-HY4cpAtoJn3jCczBRvjKSceH2i2zbc/1564336583/sites/default/files/inline-images/IMG-20190727-WA0086.jpg)
அதிமுக தலைமை களம்மிறக்கியுள்ள 209 தேர்தல் பொறுப்பாளர்கள், திமுக களம்மிறக்கியுள்ள 11 பேர் கொண்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்துள்ளது. இவர்கள் தலைமையில் இரண்டு கட்சியை சேர்ந்த வெளியூர் நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தேர்தல் வேலையில் ஈடுப்பட்டுள்ளனர்.
தொகுதியில் உள்ள முக்கிய சங்கங்கள், அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகிகள், தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர் ஆளும்கட்சியான அதிமுகவினரும், திமுகவினரும். இந்நிலையில் இதுவரை அரசியல் மற்றும் தேர்தல் ஆதரவு நிலைப்பாடு எடுக்காத சி.எம்.சி நிர்வாகம், முதல்முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஆசியாவில் பிரபலமானது வேலூர் சி.எம்.சி மருத்துவமனை. ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரி என பரந்துவிரிந்தது. இந்த நிர்வாகத்தின் கீழ் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிறுபான்மை பிரிவின் கீழ் இந்த சி.எம்.சி இயங்கிவந்தாலும், மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கிருஸ்த்துவ பணியாளர்கள் மட்டும்மல்லாமல் இந்துக்களும் கணிசமான அளவில் உள்ளனர். இந்தியா மட்டும்மல்லமால் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு சிகிச்சை பெற நோயாளிகள் வருகின்றனர். தற்போது மருத்துவமனை நிர்வாகத்தின் தலைமை இயக்குநராக பீட்டர் என்பவர் உள்ளார்.
![Election stance - CMC management in dispute!](http://image.nakkheeran.in/cdn/farfuture/txDkTZklBfmCQQV3Wa4ruHnsuWn9zX4SAMHdjVaaD-A/1564336689/sites/default/files/inline-images/IMG-20190727-WA0084.jpg)
இந்த பீட்டரை சந்தித்து சால்வை அணிவித்து நடைபெறும் வேலூர் நாடாளமன்ற தேர்தலில் ஆதரவு கேட்டுவிட்டு வந்துள்ளார் அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும், கழக மகளிரணி மாநில செயலாளருமான விஜிலாசத்தியானந்தம். இவர் நாடார் கிருஸ்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் நூற்றாண்டை கடந்து செயல்படும் சி.எம்.சி நிர்வாகம், இதுவரை எந்த தேர்தலிலும் நேரடியாக, மறைமுகமாக யாருக்காகவும் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததில்லை. அப்படியிருக்க இந்த வேலூர் தேர்தலில் அதிமுக எம்.பி வந்து ஆதரவு கேட்டு சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். எங்கள் தலைமை இயக்குநர் அனுமதியில்லாமல், அதிமுக எம்.பியால் எப்படி சந்தித்துயிருக்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர் சி.எம்.சியில் பணியாற்றும் ஊழியர்கள்.
இன்னார்க்கு வாக்களியுங்கள் என இதுவரை ஊழியர்களிடம் நிர்வாகம் சொல்லவில்லை என்பது ஒருபுறம்மிருந்தாலும், தேர்தல் நேரத்தில் அதிமுக எம்.பியை சந்தித்து சால்வை பெற்றுக்கொண்டது என்பது அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்றது தானே?, அப்படித்தானே அதனை பார்ப்பவர்கள் சொல்வார்கள் எனக்கேட்கிறார்கள்.
சிறுபான்மையின வாக்குகளை கவர சிறப்பு ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறோம் என ஏ.சி.சண்முகம் தரப்பு சொல்லிக்கொண்டுயிருந்தது. அது இதுதானோ ?. சிறுபான்மையின வாக்குகள் மோடிக்கு எதிராக உள்ளது எனச்சொல்லி வந்த நிலையில் பிரபலமான சி.எம்.சி நிர்வாகம், அதிமுக எம்.பியை சந்தித்துயிருப்பது பெரும் சர்ச்சையை அதன் நிர்வாகத்திலும், ஊழியர்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது.