அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டி கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் மேலவீதியில் உள்ள நூர்சாகிப் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.முருகுமாறன் முன்னிலை வகித்தார். அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான தமிழ் மகன் உசேன் சிறப்பு பிரார்த்தனை நடத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் குமார், டேங்க் சண்முகம், மீர்ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சிறுபான்மை உலமாக்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான். அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் நல்லாசியோடு ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கிய இந்த இயக்கத்தில் இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொதுச் செயலாளராக பொறுப்பேற்று நிரந்தரமாக இந்த இயக்கத்தையும், கட்சி தொண்டர்களையும் சிறப்பான முறையில் கட்டி காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும், மீண்டும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொறுப்பை ஏற்று மீண்டும் வரவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆன்மீகப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரையில் 30 மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளேன். திமுக அரசு செய்கின்ற தில்லுமுல்லுகளையும், கொடுமைகளையும், நாட்டு மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயத்தையும், மின்சாரம் கட்டணம் முதல் சொத்து வரி உயர்வு என அத்தனை வரிகளையும் உயர்த்தி பொதுமக்களை கசக்கி பிழிந்து எடுக்கிற இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எப்போது தேர்தல் வரும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அருளால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்தால், வரும் என்று நம்புகிறோம். அப்படி சட்டப்பேரவை தேர்தல் வந்தால் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி விட்டு மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிப் பொறுப்பை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம், மக்களிடம் பிரதிபலிக்கிறது'' என்றார்.