முதல்வருக்கான கான்வாய் வாகனங்களைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல் டிஜிபி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வரின் பாதுகாப்பிற்காக அவரது காரின் முன்னும் பின்னும் செல்லும் பாதுகாப்புக்கான கான்வாய் கார்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பாதுகாப்புக்காக மொத்தம் 13 அல்லது 12 கார்கள் முதல்வர் பயணிக்கும் காரின் முன்புறமும், பின்புறமும் செல்லும். இதில் குண்டு துளைக்காத ஜாமர் கார், இணைய வழியிலான ஆபத்துகள் இருந்தால் துண்டிக்கத் தொழில்நுட்ப வசதி கொண்ட ஒரு கார், அட்வான்ஸ் பைலட், அட்வான்ஸ் டிசி உள்ளிட்ட கார்கள் இடம்பெறும். அதேபோல் டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முதல்வரின் காருக்கு முன்னதாக சென்று அங்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா எனக் கண்காணிப்பார்.
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வரின் பாதுகாப்பிற்காக இயங்கும் இந்த கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 6 முதல் 7 கான்வாய் வாகனங்களே இடம்பெறும். போக்குவரத்து நெரிசல், முதல்வர் வருகைக்காகப் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.