Skip to main content

“பாலியல் குற்றவாளி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - சண்முகம் கண்டனம்

Published on 02/03/2025 | Edited on 02/03/2025

 

Shanmugam condemns Seeman for speaking about women

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை விஜயலட்சுமி  புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு கடந்த 17ஆம் தேதி (17.02.2025) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக 27 ஆம் தேதி சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். தொடர்ந்து சீமான் ஆஜராக மறுத்த நிலையில் அடுத்த நாள் 28 ஆம் தேதி ஆஜராக போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். அதனைத் தொடர்ந்து சீமான் அன்று இரவு 10 மணியளவில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகினார். கோயம்பேடு காவல் இணை ஆணையர் அதிவீர பாண்டியன் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செம்பேடு பாபு ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த சீமான், முகம் சுழிக்க வைக்கும் வகையில் நடிகை குறித்து பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல் தர்மபுரியில் மற்றும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதும் நடிகை குறித்து அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகப் பேசியிருந்தார். இதற்கு பலரும்  எதிர்ப்பு தெரிவித்தனர். கனிமொழி எம்.பி., நாதகவில் இருக்கும் பெண்கள் சீமான் பேசுவதை எப்படிச் சகித்துக் கொண்டு கட்சியில் இருக்கிறார்கள் என்று  கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சீமான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பாலியல் குற்றவாளி சீமான் தொடர்ந்து ஊடகத்தில் பெண்களை வாயில் சொல்ல முடியாத சொற்களால் அநாகரீகமாகவும் தரக்குறைவாகவும் பேசுவதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை என்ன செய்ய முடியும் என்று ஆணவத்துடன் சட்டத்திற்கு சவால் விட்டுக்கொண்டுள்ள அவர்மீது தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய கட்சியில் பெண்களை மதிப்பவர்கள் இருந்தால் உடனடியாக அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்