
சேலத்தில், லாரி ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் வசூலித்த காவல் ஆய்வாளர், சிறப்பு எஸ்ஐ ஆகியோரை சரக டிஐஜி மகேஸ்வரி அதிரடியாக பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வமணி தலைமையில் காவலர்கள், சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வசூலித்துவருவதாக புகார்கள் கிளம்பின.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, லாரி ஓட்டுநர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டதை லாரி கிளீனர் ஒருவர் செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார். இதைக் கவனித்துவிட்ட ஆய்வாளர் செல்வமணி, அவரை சரமாரியாக தாக்கியதோடு, லஞ்சமும் வசூலித்துள்ளார்.
லாரி ஓட்டிகளிடம் செல்வமணி லஞ்சம் வாங்கும் படமும், லாரி உரிமையாளர்கள் காவல்துறையினரிடம் பேசும் குரல் பதிவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால் மாவட்டக் காவல்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி அபிநவிடம் லாரி உரிமையாளர்கள், ஆய்வாளர் செல்வமணி உள்ளிட்டோர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்தில் இருந்த ஆய்வாளர் செல்வமணி, சிறப்பு எஸ்ஐ செல்வமணி, தலைமைக் காவலர்கள் சங்கர், ராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர்கள் நான்கு பேரும் நீண்டகாலமாகவே கனரக வாகன ஓட்டிகளை மடக்கி கட்டாய வசூலில் ஈடுபட்டிருப்பதும், விதிகளை மீறி செல்லும் லாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பணம் வசூலித்துவந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் செல்வமணி உள்ளிட்ட நான்கு பேரையும் அதிரடியாக சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி அபிநவ் உத்தரவிட்டார். இது தொடர்பாக சேலம் சரக டிஐஜி மகேஸ்வரிக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பணி நேரத்தில் அலட்சியமாக செயல்பட்டதோடு, லஞ்ச வேட்டையிலும் ஈடுபட்ட ஆய்வாளர், சிறப்பு எஸ்ஐ ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். புகாருக்குள்ளான நான்கு பேரிடமும் துறைரீதியான விசாரணையும் நடந்துவருகிறது.
இந்த சம்பவம், சேலம் மாவட்டக் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டிஐஜி, எஸ்பி ஆகியோர் சேலம் சரகத்தில் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.