கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.
இத்தகைய சூழலில் இன்று (25.06.2024) காலை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார். அப்போது அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உடன் இருந்தனர். ஆளுநரை சந்தித்து மனு அளித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சியின் நகரின் மையப்பகுதியில் விஷச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” எனத் தெரிவித்தார்.