சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (06/06/2022) மாலை 04.45 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "சேலம், ஓமலூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்தது. சேலம் மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் தான் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
எடப்பாடியில் உள்ள 30 வார்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் கொண்டு வந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டது. எடப்பாடி தொகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான். அ.தி.மு.க. அரசு மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மு.க.ஸ்டாலின் பொய் தகவல்களைப் பரப்புகிறார். சேலம் மாவட்டத்தில் புதியதாக 16 பேருந்து நிலையங்கள், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க.- பா.ஜ.க. உறவில் எவ்வித உரசலும் இல்லை. நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க அ.தி.மு.க. ஆட்சியில் எச்சரிக்கை பலகைகள் வைத்தோம். ஆறுகள், தடுப்பணைகளில் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூபாய் 5 லட்சம் நிதியுதவியை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. பெட்ரோல்- டீசல் மீதான மாநில வரிக்குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் பேசியும் எந்த பதிலும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், முதலமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டத் திட்டங்களை ஒவ்வொன்றாக எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.