![Edappadi Palanisamy to accept Chief Minister's challenge!](http://image.nakkheeran.in/cdn/farfuture/O4T6zig429R9ojRmt0Skspbh9xPTVN5dJ5WKGNQRS2w/1644557057/sites/default/files/inline-images/EDAPADI434344.jpg)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டம், புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு மீது திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு யாருடைய ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது? எதையாவது கூறி முதலமைச்சர் மு.ஸ்டாலின் தப்பிக்கப் பார்க்கிறார். நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் உள்ளதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின் தற்போது என்ன செய்கிறார்? இளைஞர்கள், மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தற்போது மாற்றி மாற்றி பேசுகின்றனர்.
மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்கிறோம். நானும், அண்ணன் ஓ.பன்னீர்செல்வமும் பொது இடத்தில் வைத்து நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயார். நீங்கள் தயாரா? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என மு.க.ஸ்டாலின் கூறியது பொய். 70% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார்
இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் நான் தான் என தன்னைத் தானே மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். முதலமைச்சர்களுக்கெல்லாம் முதலமைச்சர் எனவும் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். பொய் கூறுவதில் தான் ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர்; நிர்வாகத்தில் அல்ல" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு குறித்து தன்னுடன் விவாதிக்கத் தயாரா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.