Skip to main content

பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் மரியாதை!

Published on 27/11/2024 | Edited on 27/11/2024
dy cm udhayanidhi stalin  honors Anna kalaignar Memorial

தமிழக துணை முதலமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்தநாள் விழா இன்று (27.11.2024) திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ. சாமிநாதன்,  நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கலைஞர் நினைவிடத்தில், ‘மனிதநேய உதய நாள்’ என்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். இது தொடர்பாகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும், அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும்  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டேன்.

எந்நாளும் வழிநடத்தும் தாய், தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகள் காக்க ஓய்வெடுக்காமல் உழைத்த கலைஞர் ஓய்வு கொண்டிருக்கும் அவரது நினைவிடத்தில், பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக என்றும் அயராது உழைப்பதற்கான உத்வேகத்தையும், ஊக்கத்தையும் கலைஞர் நினைவிடத்தில் பெற்று வந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்