சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (05.10.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, கொரோனா பெருந்தொற்று, பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என அடுத்தடுத்து எதிர்கொண்ட பேரிடர்களை மிகச்சிறப்பாகக் கையாண்டு மக்களைக் காப்பாற்றியது. அந்த கனமழை, வெள்ளப் பெருக்கைப் பாடமாகக் கொண்டு மழைநீர் வடிகால்களைச் சீரமைப்பது, வெள்ளம் வடியும் கால்வாய்களைத் தூர்வாரும் பணியை வேகப்படுத்துவது என பல்வேறு திட்டப் பணிகளைத் தமிழக அரசு மேற்கொண்டது.
இன்னும் பல பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் கடந்த ஆண்டு வரலாறு காணாத மழையின்போது மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தினை மனதில் கொண்டு. இந்த மழையை எதிர்கொள்ள நாம் தயாராகிக்கொண்டு இருக்கிறோம். வடகிழக்குப் பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கிவிடும் என்று தெரிகிறது. அதனால் மழைநீர் வடிகால் பணி. மின்வாரிய கேபிள்களை அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி என ஏற்கெனவே செய்து வரும் பணிகளை விரைந்து முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் புதிய பணிகளை எடுப்பதற்கு முன், நாம் ஏற்கெனவே எடுத்து முடிக்காமல் உள்ள பணிகளைச் செய்து முடிக்கும்படி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
நேற்று கூட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள், நீர் வழிக்கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி என்று மழைக்காக எடுத்துவரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து எடுத்துக்கூறியிருந்தார். தாழ்வான பகுதிகள், மழைக் காலங்களில் அதிகமாகத் தண்ணீர் தேங்கும் பகுதிகளின் பட்டியல் வார்டு வாரியாக உள்ளன. அதனால் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் மோட்டார் பம்புகள், மக்களைக் காப்பாற்றி அழைத்து வருவதற்கான படகுகளை ஒரே இடத்தில் வைத்திராமல் அந்தந்த வார்டுகளுக்கு இப்போதே பிரித்து வழங்கி பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கடந்த மழையின்போது சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விசாரிக்கும்போது மண்டலத்துக்கு ஒரு இடத்தில் உணவு சமைத்து அங்கிருந்து பிரித்து வழங்குவதால் இந்தத் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தனர். அந்தத் தாமதத்தை தவிர்க்க, எங்கெல்லாம் மழை நீர் அதிகமாக தேங்குமோ அதற்கு அருகிலேயே சமையற்கூடங்களை அமைத்துச் சமைத்து வழங்கினால் மக்களுக்கு உரிய நேரத்தில் நம்மால் உணவு வழங்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.
அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பால் பாக்கெட்டுகளை வழங்க கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாடும்போது அவர்கள் கேட்கும் பால் பாக்கெட்டுகளை உடனடியாக வழங்க உரிய அறிவுறுத்தல்களை ஆவின் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 1000 பால் பாக்கெட்டுகள், ஆயிரம் பிரட் பாக்கெட் என்ற அளவில் வழங்குவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கான அறிவுறுத்தல்களை மாநகராட்சி, வருவாய் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். சென்னையில் அம்பத்தூர், மாதவரம், காக்களூர் ஆகிய இடங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது. கடந்த மழைக் காலத்தில் அந்தப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பால் பாக்கெட்டுகளை அங்கிருந்து வெளியே எடுத்து வருவதில் சிரமம் ஏற்பட்டது. அதுபோன்ற சூழல் ஏற்படாத வகையில் அந்த இடங்களையும் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன், வி. செந்தில் பாலாஜி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, எஸ்.எம். நாசர். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் எனப் பலரும் கலந்து கொண்டனர்.