தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை, மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்கள் மரணம் அடைய, அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு மதுரை உயர்நீதமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கிடையே ‘ஃப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் மேம்பாட்டுக் கழக அமைப்பாளர் அதிசய குமார் மாநில மனித உரிமை ஆண்யத்திடம் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் தலைவர் துரை ஜெயசந்திரன் எந்த அடிப்படையில் பிரெண்ட்ஸ் ஆப் போலிஸ், காவல்துறை பணிகளை செய்கின்றது, அந்த அமைப்பை பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக பதில் அளிக்க டிஜிபி மற்றும் உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டடார்.