Skip to main content

 இளைஞரை பறி கொடுத்துவிட்டு தவித்த குடும்பம்; உதவிக்கரம் நீட்டிய துரை வைகோ!

Published on 02/01/2025 | Edited on 02/01/2025
Durai Vaiko meets family  deceased  Trichy and offered condolences

தென்னாப்பிரிக்கா நாடான தான்சானியாவிற்கு வேலைக்கு சென்ற திருச்சி நிவாஷ் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலைத் தமிழகத்திற்கு கொண்டுவர குடும்பத்தினர் தவித்து நின்ற போது திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உதவியின் மூலம் பெண்ணின் உடல் நேற்று திருச்சி வந்தடைந்தது.

இந்த நிலையில் இன்று உயிரிழந்த நிவாஷ் குடும்பத்தினரைச் சந்தித்த திருச்சி எம்.ப்பி துரை வைகோ ஆறுதல் கூறினார். இந்த சம்பவம்  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி கே.கே.நகரை சேர்ந்த புருஷோத்தமன் மகன் நிவாஷ்(42) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்க நாடான தான்சானியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 21 ம் தேதி இறந்துவிட்டதாகவும் அவரது உடலை திருச்சிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து தரக்கோரி உறவினர்கள் மூலமாக கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அறிந்த நான் உடனடியாக தலைவர் வைகோ மூலமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்ட போது, அவர் அமெரிக்காவில் இருப்பதாக தெரிவித்தார்.  தானும் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நிவாஷ் எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தவர். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டுவர ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். கடந்த மாத இறுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விடுமுறை நாட்களாக இருந்ததால் உடனடியாக அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் கால தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக நேற்று(01.01.2025) காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

Durai Vaiko meets family  deceased  Trichy and offered condolences

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய நடைமுறைகளை முடித்து விரைவாக உடலை வெளியே கொண்டு வரும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன். விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களும் அதற்கு உண்டான பணியை விரைவாக செய்து உடலை பெற்றுத் தந்தனர். நேற்று மாலை திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட நிவாஷின்  இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திமுக திருச்சி மாவட்ட தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இன்று(02.01.2025) காலை அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது தந்தை, தாயார், சகோதரர், மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

‘தான்சானியா நாட்டிலேயே எரியூட்டி விடுகிறோம் என்று எங்களுக்கு தகவல் கிடைத்த பிறகு யாரை அணுகுவது? என்று திக்கு தெரியாமல் நின்ற பொழுது தங்களை அழைத்ததும் உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு உடலைக் கொண்டு வந்தது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது. அதற்காக எங்கள் குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறினர்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக எனது தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதே எமது கடமை. அதுவே எனக்கு மன நிறைவை தரும் பணி. இன்று  நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்