நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. மதுரை மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று காலை 9 மணி முதல் தொடங்கிய இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுகவினர் பல காலமாக போராடி வருகின்றனர். அதே போல், தமிழகம் முழுவதும் மாணவர்களும், பெற்றோரும் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். இதன் ஒருபடி மேல் சென்று மாணவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். தமிழக அரசும் இது தொடர்பான மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால், தற்போது வரை இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கு முன்பு இந்தி திணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் பலர் தங்களது உயிரை இழந்தனர். அதே போல், நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றனர். இந்த நீட் தேர்வால், ஏழை மாணவர்கள் மருத்துவராக மாறும் வாய்ப்பை இழந்துள்ளனர். அதைப்பற்றி மத்திய அரசு இதுவரை கவலைப்படவில்லை. இந்தி திணிப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் விட்ட சாபத்தால் அன்றைய மத்திய அரசு வீழ்ந்தது. அந்த வகையில், இன்று நீட் தேர்வால் உயிரிழந்தோரின் சாபம் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை வீழ்த்தும்.
இந்த நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல்வாதிகள் மட்டுமல்ல கல்வியாளர்கள் முதற்கொண்டு அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இன்றோடு முடியாது. இது தொடர் போராட்டமாக நடைபெறும்” என்று கூறினார்.