தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சில இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் திருச்சியில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி-மதுரை ரோடு பகுதியில் போதை மாத்திரைகளை 2 பேர் விற்றுக் கொண்டிருப்பதாகக் கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று போதை மாத்திரைகளை விற்றுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜமீர் பாஷா (வயது 20,) வள்ளுவர் நகரைச் சேர்ந்த காதர் மொய்தீன் (வயது 21 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.