‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை சென்று மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார். சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர். ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் தொடர்ச்சியாக மாலை 6 மணியளவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட இருக்கிறார். இதன் காரணமாக இன்றும், நாளையும் நெல்லையில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் மேற்கொள்ளும் ஆய்வைத் தொடர்ந்து நாகர்கோவிலில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழக முதல்வர் பங்கேற்க சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.