கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தென்கீரனூர் கிராமத்தின் வழியாக புதூர் புக்கிரவாரி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீசாரின் விதிகளை மீறி அதிவேகமாகச் சென்றது. இதைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த தனியார் பேருந்தை கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர். பின்பு ஓட்டுநரைக் கீழே இறக்கி அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கியது தெரியவந்தது.
அப்போது இந்த தனியார் பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அடுத்தடுத்த நிறுத்தங்களில் அதிக பயணிகள் ஏற்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. மதுபோதையில் பேருந்தைக் கொண்டு விபத்து ஏற்படுத்தி இருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக போலீசார் அதனைத் தடுத்துள்ளனர். தனியார் பேருந்து ஓட்டுநர் மது போதையில் பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மது போதையில் பேருந்தை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் வாணவரெட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரி என்பவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து மாற்று ஓட்டுநர் மூலமாக அந்த பேருந்து கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் இருந்து புதூர் புக்கிரவாரி கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றது.