இந்தியாவில் நீட் தேர்வு, கல்லூரி கட்டணம் போன்ற காரணத்தால் இங்கு மருத்துவம் படிக்கச் சிரமம் உள்ளதால் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சீனா, ஜார்ஜியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படித்து நாடு திரும்புகின்றனர்.
அப்படி வெளிநாட்டில் மருத்துவம் படித்துவரும் மாணவர்கள் தகுதித் தேர்வு போன்று நடத்தப்படும் எப்.எம்.ஜி.இ என்ற தேர்வை எழுதி தகுதி பெற்றால், இந்தியாவில் மருத்துவ பணி செய்ய, மெடிக்கல் கவுசில் ஆப் இந்தியா வால் நடத்தப்படும் என்.பி.இ எனப்படும் நேஷ்னல் போர்டு ஆப் எக்ஸ்சாமினேஷன் தேர்வு எழுதவேண்டும்.அதில் பாஸ் செய்தவர்களுக்கு இங்கு மருத்துவ பணி செய்ய லைசன்ஸ் வழங்கப்படும்.
கடந்த வருடம் டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற இந்திய அளவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு லைசன்ஸ் வழங்கப்படவில்லையாம். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இருநூறு மருத்துவர்கள் லைசன்ஸ் கிடைக்காமல் மருத்துவம் முடித்தும் என்.பி.இ தேர்வில் தேர்ச்சி அடைந்தும் பணிக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.
மேலும் டில்லியில் உள்ள எம்.சி.இ யில் தொடர்பு கொண்டால் கொரோனா வைரஸ் பாதிப்பால் அலுவலகம் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்கிறார்கள். தற்போதுள்ள சூழலால் மருத்துவர்களின் சேவை நாட்டிற்கு தேவை. இது போன்ற அவசரநிலையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தால் தமிழக சட்டசபை நடைபெறுவதால் தற்போது அமைச்சர் பிஸியாக இருக்கிறார் என்ற பதில் வருகிறதாம். இதனால் மருத்துவர்கள் அனைவரும் இந்த வாரம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.