குடியிருப்பு மாத பராமரிப்பு கட்டணம் 7,500 ரூபாய்க்கு மேலிருந்தால், முழு தொகைக்கும் வரி செலுத்த வேண்டும் என்ற ஜிஎஸ்டி ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போரிடம் வசூலிக்கப்படும் பராமரிப்பு கட்டணம், 7,500 ரூபாய்க்கு மேல் வசூலித்தால் சம்பந்தப்பட்ட தனி நபரிடமிருந்து ஜி.எஸ்.டி. வரியாக 18 சதவீதத்தை வசூலிக்க வேண்டுமென (அத்தாரிட்டி ஃபார் அட்வான்ஸ் ரூலிங்) ஆணையம் 2019ஆம் ஆண்டு முடிவெடுத்தது. அவ்வாறு செலுத்தப்படும் முழு தொகைக்கும் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க வேண்டுமென மத்திய நிதித் துறையும் தெளிவுபடுத்தியது.
இந்நிலையில், இந்த விதிமுறைகளை எதிர்த்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டி.வி.ஹெச். லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆணையம் நிர்ணயித்துள்ள விதிகளின்படி ரூ. 7,500க்கு மேல் பராமரிப்பு கட்டணம் செலுத்தும்போது முழுத்தொகைக்கும் வரி வசூலிக்க கூடாது எனவும், அதற்கு மேற்பட்டு செலுத்தபடும் தொகைக்கு மட்டுமே வரி வசூலிக்க வேண்டுமென மனுவில் குறிபிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியபோது குடியிருப்புச் சங்கங்களுக்கு சாதகமாக கருத்து தெரிவித்த அரசு, பின்னர் தனது கருத்தை மாற்றிக்கொள்ள முடியாது எனக் கூறி, பராமரிப்பு சந்தா தொகை 7,500 ரூபாய்க்கு மேலிருந்தால் முழுமையான ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்ற ஜி.எஸ்.டி. (ஏஆர்ஏ - அட்வான்ஸ் ரூலிங் அதாரிட்டி) ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.