
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் வரை நடைமுறையில் வைத்திருந்தது.
இதற்கிடையே ஜனவரி மாதம் இறுதியில் பெரும்பாலான கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விலக்கிக்கொண்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் முதல் அனைத்து விதமான தொழில் நிறுவனங்களும் முழு வீச்சில் இயங்கி வந்தன. ஆனால், பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நடைமுறையிலிருந்து வந்தது.
இந்நிலையில் நாளை முதல் அரசியல், சமுதாய கூட்டங்களுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இறப்பு நிகழ்ச்சிகளில் 250 பேர் வரையிலும், திருமண நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை பங்கேற்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.