![Do not come to meet me till the 24th - Minister's request!](http://image.nakkheeran.in/cdn/farfuture/h-3shy9uXSZUm92NsQnbAHHm4QDrhnSosNaKm-QTInQ/1620799638/sites/default/files/inline-images/anbil-mahesh-poyyamoli.jpg)
தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் தாக்கத்திலிருந்து பொது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (11.05.2021) தன்னுடைய தொண்டர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் என்னை வாழ்த்துவதற்கு யாரும் நேரில் வர வேண்டாம் என்றும் குறிப்பாக நான் சென்னையில் இருந்தாலும் திருச்சியில் இருந்தாலும் என்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், அப்படி வருவதால் முதல் அமைச்சரின் உத்தரவை மீறுவதாக ஆகிவிடும், முழு ஊரடங்கையும் நாம் செயல்படுத்தினால் மட்டுமே இந்த நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளுடன் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஒருபோதும் முதலமைச்சரின் இந்த உத்தரவைக் கட்சித் தொண்டர்கள் மீறிவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக செயல்படுங்கள் என்று அறிவுரையும் கூறியுள்ளார்.