![Do not ask questions Executive Officer](http://image.nakkheeran.in/cdn/farfuture/SIEvnbGbV3nk5yLu2kT5a-KfnQo-jJNwMwpP8yNyDuM/1662010828/sites/default/files/inline-images/th_3131.jpg)
சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் வார்டு உறுப்பினர்கள் டீ, காபி, வடை சாப்பிட்டுவிட்டு கேள்வி கேட்காமல் செல்ல வேண்டும் என செயல் அலுவலர் சிவக்குமார் பேசியதால் தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்ததோடு வெளிநடப்பும் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தையன்கோட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 15 வார்டுகளை திமுகவும், 2 வார்டுகளை காங்கிரஸும், ஒரு வார்டை அதிமுகவும் வென்றது. இந்தப் பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவராக திமுக உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் போதும் பொண்ணு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்று பேசினார். கூட்டம் ஆரம்பித்து அஜண்டா வாசிக்கும்போது தி.மு.க. வார்டு உறுப்பினர் லாவண்யா, ஒவ்வொரு முறையும் கூட்டம் நடக்கிறது. வரவு செலவை முறையாக காண்பிப்பது இல்லை. பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக நடைபெறுவது இல்லை. செயல் அலுவலர் பாதி நேரம் மாவட்ட அலுவலகத்தில் வேலை என சென்று விடுகிறார். வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதில்லை என்றார்.
அப்போது அவருக்கு ஆதரவாக தி.மு.க. வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் ரத்தினக்குமார் உட்பட அனைத்து தி.மு.க. வார்டு உறுப்பினர்களும் லாவண்யாவின் கோரிக்கை நியாயமானது எனக் கூறி தங்கள் வார்டுகளிலும் எந்தப் பணியும் நடைபெறவில்லை. நிதி எங்கே செல்கிறது என கேள்வி எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செயல் அலுவலர் சிவக்குமார், நிதி இருந்தால் தான் செய்ய முடியும். நிதி இல்லை என்றால் செய்ய முடியாது. மாதாந்திர கூட்டத்திற்கு வரும் வார்டு உறுப்பினர்கள் வடை, டீ சாப்பிடுவதோடு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு கூட்ட அமர்வு பெற்று செல்ல வேண்டும். வேறு எந்த கேள்வி கேட்டாலும் ஒன்றும் நடக்காது என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் செயல் அலுவலர் சிவக்குமாரிடமும், துணைத்தலைவர் ஜாகீர் உசேனிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தனர். இச்சம்பவம் சித்தையன்கோட்டை பேரூராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.