ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றிய சேர்மனாக இருப்பவர் வடிவேல். நெமிலி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவர் கட்சியின் கிளை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகி என இருவரிடம் அநாகரிகமாகப் பேசும் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெமிலி ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக திமுக கிழக்கு ஒ.செ.வும் ஒன்றியக்குழு தலைவருமான வடிவேலுக்கும் திமுக கிளை செயலாளர்கள் சிலருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இது குறித்து திமுக நிர்வாகி ஜீவரத்தினம், திமுக பிரமுகர்கள் உள்ள வாட்ஸ்ஆப் குழுக்களில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை திருமாதாளம்பாக்கம் திமுக கிளை செயலாளர் கோகுல்நாத் என்பவரும் ஆதரித்து அதே வாட்ஸஆப் குழுக்களில் பதிவு போட்டுள்ளார்.
இந்தப் பதிவுகளால் அதிருப்தியான சேர்மன் வடிவேல் சம்பந்தப்பட்ட இருவரையும் தொடர்புகொண்டு, “உங்கள ஒழிச்சிடுவன். உங்களைப் பத்தி பசங்களிடம் சொல்லியிருக்கேன். உங்கள அவங்க பார்த்துக்குவாங்க. ஆம்பளையா இருந்தா நேரில் வா” என ஒருமையில் படுமோசமாகப் பேசி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தன்னையும் ஒன்றிய செயலாளர் வடிவேலையும் அவமானப்படுத்தி இலுப்பைதண்டலம் கோகுல்நாத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதுகிறார் என நெமிலி ஒன்றியக்குழு கவுன்சிலர் வரலட்சுமி அசோக்குமார் தக்கோலம் காவல்நிலையத்தில் புகார் மனு தந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஒன்றிய செயலாளர் சேர்மன் வடிவேலிடம் பேசியபோது, “அவர் பொய் பொய்யாக என் மீது குற்றம் சாட்டி வருகிறார். என் மீது புகார் என்றால், மேலேயுள்ள நிர்வாகிகளிடம் தர வேண்டும். அதை விட்டுவிட்டு வாட்ஸ்ஆப்பில் எழுதினால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? அதைத்தான் அவரிடம் கேட்டேன். பணம் வாங்கினேன் என என் மீது குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் அவரிடம் என்ன உள்ளது? அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அதிமுகவில் இருந்து வந்த சிலரை கட்சியில் சேர்த்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் என் மீது குற்றம் சாட்டுகிறார். அவர் உட்பட கட்சியில் வேலை செய்யாத சிலரை கட்சியில் இருந்து நீக்கப்போகிறோம்” என்றார். (இங்கு சேர்மன் வடிவேல் ஒருமையில் பேசியுள்ளார். மரியாதை நிமித்தமாக அவை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது)
நெமிலி ஒன்றியத்தில் கட்சி நிர்வாகிகளுக்குள் அதிகாரத்திற்கான சண்டை நடந்து வருகிறது. அந்த கோஷ்டி பூசலின் வெளிப்பாடே இந்த சண்டை, ஆடியோ, புகார் எல்லாம் என்கிறார்கள் விவகாரத்தை அறிந்தவர்கள். இவர்களின் சண்டையை எதிர்க்கட்சிகள் ரசித்து வருகின்றன.