விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவில் சர்வேயராக வேலை செய்து வருபவர் வெங்கடாசலம். அதே விக்கிரவாண்டி பழைய காவல் நிலைய தெருவைச் சேர்ந்தவர் ராஜு(42). இவர், வி. சாலை பகுதியில் புதிதாக வீடு கட்ட வீட்டுமனை வாங்கியுள்ளார். பிறகு முறைப்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. கிரையம் பெற்ற அந்த வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்து தரும்படி இணைய வழி மூலம் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்த மனையை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு சர்வேயர் வெங்கடாஜலத்தை சார்ந்தது. அவர் ராஜுவுக்கு சொந்தமான இடத்தை அளந்து பட்டா மாற்றம் செய்வதற்கு காலதாமதம் செய்து வந்துள்ளார். இதை அறிந்த ராஜு, நேரடியாக சர்வேயர் வெங்கடாசலத்தை சந்தித்து இது குறித்து கேட்டுள்ளார். அப்போது சர்வேயர் வெங்கடாசலம், ராஜுவிடம் ரூ. 5,000 லஞ்சம் கொடுத்தால் வீட்டுமனையை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்து தரப்படும் என்று கராராக கூறியுள்ளார்.
ராஜு, இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி, ஆகியோர் கொண்ட குழுவினர் ராஜுவிடம் ரசாயனம் தடவிய 5000 ரூபாய் பணத்தை கொடுத்து சர்வேயர் வெங்கடாஜலத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
அதன்படி சர்வேயர் வெங்கடாசலத்தை தாலுக்கா அலுவலக வளாகத்தில் நேற்று சந்தித்த ராஜு, அவரிடம் 5000 ரூபாயைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வெங்கடாசலத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் அளிக்கப்பட்ட லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.