அண்ணா வகுத்த பாதையிலிருந்து திமுக மாறிவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''விநாயகர் சதுர்த்திக்கு நமது தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லுவதில்லை என பாஜக என்று கேள்வி எழுப்பியிருந்தது. முதன்முதலாக விநாயகர் சதுர்த்தி நாளுக்கு விடுமுறை அறிவித்த அரசு எது என நீங்கள் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். விநாயகர் சதுர்த்திக்கு முதன்முதலாக விடுமுறை அறிவித்தது திமுக அரசு. அன்றைய முதல்வர் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்தார்.
இன்று திமுக கட்சி பேரறிஞர் அண்ணா வகுத்துவிட்ட பாதையிலிருந்து எந்த அளவிற்கு மாறி இருக்கிறது என்பதற்கு நமது முதல்வர் வாழ்த்து சொல்லாதது சான்று. திமுகவைச் சார்ந்த எம்பி ஒருவர் இந்து அறநிலையத்துறை சார்பில் போடப்பட்ட வாழ்த்துக்கும் கேள்வி எழுப்பி இருக்கிறார். அண்ணா விடுமுறை அளித்தது ஏதோ ஒரு சமயம், ஏதோ ஒரு மதம், அவர்கள் சார்ந்த பண்டிகை என்று சொல்வதற்காக அல்ல. பாஜக சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்கள் இஸ்லாமியர்களும் வந்து விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்'' என்றார்.