கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், 100-நாள் வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில், தரகம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பாலபாரதி தலைமை வகித்தார். போராட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தை உடனே வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, “கடவூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் ஐந்து நாள், பத்து நாள் என பெயரளவிற்கு வேலை கொடுத்து வருகின்றனர். அதில் அரசு நிர்ணயித்த 282 ரூபாய் தருவதில்லை, மாறாக 210 ரூபாய் மட்டுமே தரப்படுகிறது. எனவே 100 நாள் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசு அலுவலகம், பாஜக அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிடும் சூழ்நிலை ஏற்படும். தமிழக அரசு உள்ளாட்சித் துறை உடனடியாக இந்த திட்டப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அது போல திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதற்குள்ளாக 150 நாட்களாவது அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்” என்றார்.