![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/0kkmyMbTsnV2rerfxCUsJ2Hw3aOhC9UCrh4QxflqZkk/1725587987/sites/default/files/inline-images/a642_0.jpg)
நெல்லையில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் 'நடிகர் விஜய்யின் மாநாட்டிற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை; 21 கேள்விகளை கேட்டுள்ளது; விஜய்யை பார்த்து தமிழக அரசு பயப்படுகிறதா?' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,''பயப்படுகிறதோ இல்லையோ எந்த கட்சியாக இருந்தாலும், யார் ஆரம்பித்தாலும் அவர்களுக்கென்று ஒரு சுதந்திரம் இருக்க வேண்டும். கட்சி மாநாடு நடத்துவதற்கு அரசாங்கம் நிச்சயமாக அனுமதி கொடுக்க வேண்டும். ஒருவேளை விஜய்யை பார்த்து தமிழக அரசு பயப்படலாம். கேட்டவுடன் அனுமதி கொடுத்து விட்டு போனால் இதுபோன்ற பிரச்சனையே வராது. ஒரு கேள்விக்கு எஸ் ஆர் நோ என்று சொல்லிவிட்டால் அதற்கு எதிர்ப்பு வராது. அதைவிடுத்து 21 கேள்விகள் தேவையே இல்லை'' என்றார்.
விஜயதாரணிக்கு பதவி வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு, ''விஜயதாரணி சட்டமன்ற உறுப்பினராக இருந்து இரண்டு வருடம் பதவியில் இருக்கும் பொழுது அதனை ராஜினாமா செய்து விட்டு வந்தார். அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பதவி கொடுக்க தான் வேண்டும். நிச்சயமாக வருங்காலத்தில் அவருக்கு உரிய பொறுப்பு வழங்கப்படும். நானும் அதிமுகவில் அமைச்சராக இருந்தேன் மிகப்பெரிய பொறுப்புகளில் எல்லாம் இருந்து வந்தேன். துணைத் தலைவர் கொடுத்தார்கள். இப்பொழுது சட்டமன்ற குழுத் தலைவர் என்று கொடுத்திருக்கிறார்கள். 40 பேர் இருந்தாலும் குழு தலைவர் தான், நான்கு பேர் இருந்தாலும் குழு தலைவர் தான். எனக்கு இப்பொழுது பதவியே இல்லை. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை.கட்சி மேலிடம் கண்டிப்பாக நிச்சயமாக பதவி கொடுக்கும். கொடுக்கச் சொல்லுவோம்''என்றார்.