சென்னை அடுத்த முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கிட்டத்தட்ட 5 செமீ மழைதான், மிகப்பெரிய கனமழை எல்லாம் இல்லை. அதிமுக ஆட்சியிலிருந்தபோது 30 செமீ மழை பெய்யும் பொழுதுதான் சென்னை நகரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது. மழை வராமல் இருந்தால் 7 நாட்களில் தண்ணீர் வடியும் மழை வந்துவிட்டால் பல நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும் எனச் சொல்லுகிறார்கள். ஆக இதையெல்லாம் மக்கள் வரவேற்பார்களா?
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் நான் சென்ற பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்படவில்லை. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படவில்லை. வடகிழக்குப் பருவ மழைக்கான காலம் இன்னும் முடியவில்லை. இன்னும் இருக்கிறது. இன்னும் எவ்வளவு மழை பெய்யும் எனத் தெரியவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு உரியக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து இழப்பீடு பெற்றுத் தருவதோடு மாநில அரசும் ஒரு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்தியைப் பரப்புகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சிறப்பாகச் செயல்படுவது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்” எனக் கூறினார்.