Skip to main content

'இதுவரை 20 லட்சம் புதிய குடும்ப அட்டைகள்'-அமைச்சர் சக்கரபாணி பேச்சு

Published on 23/03/2025 | Edited on 23/03/2025
'20 lakh new family cards issued so far' - Minister Chakrapani's speech

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம். வாடிப்பட்டி, ஒட்டன்சத்திரம்-தேவத்தூர், ஒட்டன்சத்திரம்-மோதுபட்டி, பழனி-சாலக்கடை, பழனி-கொத்தையம் ஆகிய வழித்தடங்களில் புதிய நகர பேருந்துகள் இயக்கத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, 'தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த குழுவினர்களுக்கு 5 பவுனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடி மற்றும் கூட்டுறவு வங்கியில் பெண்கள் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழ்நாட்டை குடிசையில்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். அதில் முதற்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 2.50 லட்சம் பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட கப்பல்பட்டி கரும்பிற்கு புவிசார் குறியீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'20 lakh new family cards issued so far' - Minister Chakrapani's speech

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 2.25 கோடி குடும்ப அட்டை கள் உள்ளன.

விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டதில், இதுவரை 1.70 லட்சம் மின் இணைப்பு கள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அனைத்து ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1400 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் ஒட்டன்சத்திரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

கிராம சாலைகள்  மேம்படுத்தும் பணிகள், தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை யை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும்  முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ராஜாமணி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்