
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் அனைத்து தரப்பு மக்களும் எப்போதும்போல் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் நகரத்தில் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சிவனடியார் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்தார். நீதிமன்றம், அனைத்து தரப்பு மக்களும் கனகசபையில் ஏறி வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
அதனையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடராஜர் கோவில் கனகசபையில் எப்போதும் போல் அனைத்து தரப்பு மக்களும் ஏறி வழிபடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனையொட்டி தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் கனகசபையில் ஏறி வழிபட்டு வருகின்றனர். இதனை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். மேலும் அரசாணை வெளியிட தமிழக அரசிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திங்கட்கிழமை தெய்வத்தமிழ் பேரவையினர் 20-க்கும் மேற்பட்டோர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி வழிபட்டனர். அப்போது அவர்கள் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடினர். அங்கிருந்த சில தீட்சிதர்கள் எதிர்க்கும் விதமாக குரலெழுப்பி சத்தமிட்டனர். இதில் சில தீட்சிதர்கள் அவர்கள் பாடட்டும் என அனுமதித்தனர். இதனால் கனகசபையில் கூச்சல் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கனகசபையில் அனைத்து தரப்பு மக்களும் ஏறி வழிபடலாம் என அரசாணை வெளியிட்ட தமிழக அரசிற்கு நன்றி. இது மகிழ்ச்சி அளிக்கிறது. கனகசபையில் ஏறி தேவாரம் பாடும் போது அங்குள்ள தீட்சிதர்கள் கூச்சலிடுகிறார்கள். இதனை தடுக்க வேண்டும். காவல்துறையினர் அங்கு பணியில் இருந்து பக்தர்கள் மீது அடக்குமுறையை ஏவும் தீட்சிதர்களை தண்டிக்க வேண்டும். சட்ட முறைப்படி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.