கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கற்பனை செல்வம், பொருளாளர் செல்லையா, மாவட்ட துணைச்செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாய விளைநிலங்களை சீரழித்து கடலூர், நாகை மாவட்டத்தில் 3 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய உரிமத்தை ரத்து செய்யவேண்டும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் வரும் 18ம் தேதி சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தமிழக அளவில் உள்ள விவசாய சங்கம் மற்றும் தொழிலாளர் சங்க தலைவர்கள் கலந்துகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும்காலங்களில் போராட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.