கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்காக சேலம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "உள்ளாட்சி அமைப்பு தேர்தல் தொடர்பான வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் செயல்படும். இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களை சந்தித்து, வாக்குகளைக் கேட்டு வெற்றி பெறுவதுதான் ஜனநாயகம். அதை விட்டுவிட்டு தோல்வி பயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ளும்.
தோல்வியின் பயத்தில் திமுக போய்க்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே 2016ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே நீதின்றத்திற்கு சென்று தேர்தலை நிறுத்தினார்கள். இப்போதும் அந்த முயற்சிகளை திமுகவினர் மேற்கொண்டார்கள். அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தற்போது புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது. அதை ஊடகங்களில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன். அதிமுக கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய வெற்றி பெறும்'' என்று தெரிவித்தார்.