மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசும், உயர்நீதிமன்ற பதிவுத்துறையும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 31 மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு நேரடித் தேர்வு நடத்துவது தொடர்பாக 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு அதிகபட்ச வயது வரம்பாக 48 வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை எடுக்காததால், எவரும் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து, 32 மாவட்ட நீதிபதிகள் பதவிகளை நேரடித் தேர்வு மூலம் நிரப்புவது தொடர்பாக, 2019 டிசம்பர் 12- ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான வயது வரம்பு சலுகை நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் காசிபாண்டியன், உதயகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தமிழக நீதித்துறை பணிகள் விதியில், வயது வரம்பு சலுகை வழங்க தடை ஏதும் விதிக்காத நிலையில், இச்சலுகையை மறுத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையைச் செல்லாது என அறிவித்து, ரத்துச் செய்ய வேண்டும் என மனுக்களில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அடங்கிய அமர்வு, ஜனவரி 6- ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கும் உத்தரவிட்டது.