கோப்புப்படம்
முயல், மான் வேட்டைக்காக வனப்பகுதிக்குள் சென்றிருந்தபோது இளைஞரின் மார்பில் நாட்டு துப்பாக்கியின் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டியைச் சேர்ந்தவர் சென்னப்பன் (27). இவர், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) இரவு உள்ளூரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவருடன் கோட்டப்பட்டி வனப்பகுதிக்குள் மான், முயல் வேட்டைக்குச் சென்றுள்ளார். நாட்டு துப்பாக்கிகளில் பால்ரஸ் குண்டுகளை போட்டு விலங்குகளை வேட்டையாடியுள்ளனர். அவர்களுக்கு மான், முயல் என விலங்குகள் எதுவும் சிக்காததால், இருவரும் தனித்தனியாக எதிரெதிர் திசையில் பிரிந்து சென்று வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை அதிகாலையில் சென்னப்பனின் மார்புக்கு மேல் பகுதியில் திடீரென்று பால்ரஸ் குண்டுகள் பாய்ந்துள்ளன. குண்டுகள் பாய்ந்ததும் வலியால் அலறினார். சத்தம் கேட்டு பதற்றத்துடன் ஓடிவந்த பழனியப்பன், அவரை மீட்டு, சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். உடலில் பாய்ந்த பால்ரஸ் குண்டுகளை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்ற வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டப்பட்டி வனத்துறை அதிகாரிகளும், கோட்டப்பட்டி காவல்நிலைய காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். எதிரெதிர் திசையில் வேட்டையாடிக் கொண்டிருந்த நிலையில் பழனியப்பன் விலங்கைச் சுடுவதாக நினைத்து சென்னப்பனை சுட்டாரா? அல்லது வனத்துக்குள் புகுந்த வேறு யாராவது அவரை சுட்டனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் கோட்டப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.