திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் வேளாண் அறிவியல் மையம், காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக செவ்வாய்க்கிழமை காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கில் ஜல்சக்தி அபியான் (நீர் மேலாண்மை இயக்கம்) சார்பாக கே.வி.கே-வின் விவசாய மேளா நடத்தப்பட்டது.
இந்த விழாவிற்கு காந்திகிராம பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் முனைவர் சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சரவணன்(பொறுப்பு) வரவேற்று பேசினார். பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் நீர்மேலாண்மை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார். விழாவில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மழைநீரை சேமித்து வேளாண் உற்பத்தியைப் பெருகுவதுடன் விவசாயிகள் தங்களின் லாபத்தை பெருக்க புதிய தொழில்நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும்.
மழைநீரை நாம் சேமித்தால் தான் வருங்கால சந்ததியினரை பாதுகாக்க முடியும். திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் மேலாண்மை இயக்கம் (ஜல்சக்தி அபியான்) சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் பெய்யும் மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாதுகாப்பதற்காக அனைத்து குளங்களையும் தூர்வாரி வருகிறோம். ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித்துறை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள குளங்களையும், நீர்நிலைகளையும் தூர்வாரி வருகின்றனர்.
பொதுமக்கள் தினசரி பயன்படுத்தக் கூடிய தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மையை பாதுகாக்க வேண்டும் என்றார். முன்னதாக பேசிய திட்ட இயக்குநர் கே.கவிதா அவர்கள் கடந்த 2003ம் வருடம் தமிழகத்தில் மழைநீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் அவற்றை நாம் முறையாக செயல்படுத்தாததால் நிலத்தடி நீர் வெகு ஆழத்திற்கு சென்றுவிட்டது. மீண்டும் நாம் மழைநீரை பாதுகாக்க முறையாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் மதுபாலன்,(பயிற்சி), வேளாண்துறை இணை இயக்குநர் பாண்டிதுரை, வேளாண்துறை செயற்பொறியாளர் பார்த்தசாரதி, வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் நீர் மேலாண்மை இயக்க குறித்த சிறப்பு மலரை வெளியிட்டார். காந்திகிராமம் பல்கலைகழக பல்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.