
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தியதோடு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும்; அதுவரை தற்போதைய நிலை தொடரும்" எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நேற்றே இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது, வழக்கை வேறு நீதிபதிக்கு பட்டியலிட வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் கடிதம் கொடுத்திருந்தார். ஓபிஎஸ் தரப்பிலும் இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அப்பொழுது தலைமை நீதிபதி, ''ஒரு நீதிபதிக்கு முன்பாக இருக்கும் வழக்கை கடுமையான காரணம் இல்லாமல் வேறு நீதிபதிக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறை கிடையாது. இருந்தாலும் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம். வைரமுத்து தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கையையும் பரிசீலிக்கிறோம் என தெரிவித்ததோடு, இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் கருத்தை அறிந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு பட்டியலிடலாமா வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்'' என தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் தரப்பின் இந்த கோரிக்கைக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம், திருத்தம் இருந்தால் என்னிடம் முறையீடு செய்திருக்கலாம். இது நீதித்துறையை அவமதிக்கும் செயல், கீழ்த்தரமான செயல் என கூறிய நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு மீண்டும் தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலமாக முறையிட்டுள்ளது. அதில், நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். எனது செயல்பாட்டை கீழ்த்தரமான செயல் என தனி நீதிபதி விமர்சித்துள்ளார் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிலையில் அந்த கடிதம் மீது நாளை விசாரிக்க இருப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.