Skip to main content

“மகளின் சாவுக்கு நீதிகேட்டு சாகும்வரை போராடுவோம்” பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

Dindigul child case parents interview


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை அருகே இருக்கும் ஜி.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் வடமதுரையில், சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி, கூலி வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 15 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

அந்தக் குழந்தைக்கு கலைவாணி என்று பெயர் வைத்து வளர்த்துவந்தவர்கள், அதன்பின், அருகில் உள்ள பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து வந்தனர். 12 வயதான அந்தச் சிறுமி கலைவாணி, ஏழாம் வகுப்பு படித்துவந்தார். ஒரே மகள் என்பதால் 15 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் மிகவும் செல்லமாக வளர்த்துவந்தனர்.

 

இந்த நிலையில்தான் கடந்த வருடம் ஏப்ரல் 16-ஆம் தேதி வேலைக்குச் சென்று திரும்பிய லட்சுமி, தனது வீட்டில் மகள் கலைவாணி பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது அவர் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு, திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் மின்சாரம் பாய்ச்சி சிறுமி கலைவாணி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவர, பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

அதனைத் தொடர்ந்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி கொலைக்கு காரணமான அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவனை போலீஸார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். அதன்பிறகு திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதின்பேரில் வழக்கு நடந்து வந்தது. 


இது மகளை இழந்து தவித்த பெற்றோருக்கு ஓரளவு ஆறுதல் தந்தது. ஆனால் வழக்கு விசாரணையில், அந்தச் சிறுவன் கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை எனக் கூறி அவரை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் கடந்த 29ஆம் தேதி விடுதலை செய்தது. இது சிறுமியின் பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களுக்கு  நீதி கிடைக்க வேண்டுமென மாதர் சங்க நிர்வாகிகளும் முறையிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாதர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். 


மேலும் மருத்துவச் சங்கத்தினர் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றது. தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு தங்களால் மேல்முறையீடு செய்து வழக்கை நடத்த முடியாது என்பதால் இப்பிரச்சனையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதோடு சிறுமி கலைவாணியின் பெற்றோர் வெங்கடாசலம் இந்த விஷயத்தை மாநில முடிதிருத்தும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜன் காதுக்கு கொண்டு சென்றார். அதனடிப்படையில் தமிழகத்திலுள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் சிறுமி கலைவாணிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அதுபோல், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 2,500-க்கும் மேற்பட்ட சலூன் கடை தொழிலாளர்கள் குடும்பத்துடன் அந்தந்தப் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடமும் மனு கொடுத்தனர்.

 

Ad


இது சம்பந்தமாக, சிறுமி கலைவாணியின் தந்தை வெங்கடாசலத்திடம் கேட்டபோது, “எங்கள் குழந்தையின் கொலைக்கு நியாயம் வேண்டும். அந்தக் கொலை குற்றவாளிக்கு உரிய தண்டனையான தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். அதனால், தமிழக அரசு தலையிட்டு திண்டுக்கல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேல் முறையீடு செய்து நியாயம் பெற்றுத் தரவேண்டும். சாமானியருக்கும் எட்டாக்கனியாக உள்ள நீதி சாத்தியமே என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக நாங்கள் சாகும்வரை தொடர் போராட்டம் நடத்தக் கூட தயாராக இருக்கிறோம்.” என்று கண்ணீர் மல்க கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்