நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் தமிழகத்தின் முன்னாள் டிஜிபியான கருணா சாகர் காங்கிரஸில் இணைந்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கருணாசாகர் தமிழகத்தில் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி பின்னர் தமிழகத்தின் காவல்துறை டிஜிபியாக பணியாற்றியுள்ளார். பின்னர் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்திருந்தார். இந்நிலையில் அக்கட்சியிலிருந்து விலகி தற்பொழுது காங்கிரஸில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநில பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவருடைய மனைவி அஞ்சுவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
தான் காங்கிரஸில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் டிஜிபி கருணா சாகர், 'தன்னுடைய தந்தை ஒரு காந்தியவாதி. அவரது எண்ணங்கள் தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகவே சமூக நீதி பின்னப்பட்ட பெரியார் பிறந்த மண்ணில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியின் இணைகிறேன். காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியைத் தருகிறது' என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கருணா சாகர் இணைந்துள்ளதால் வரும் மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அங்கு எழுந்துள்ளது.