கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் 9-வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள செடி, கொடி, மரங்கள் கருகி காணப்படுகின்றன. இதன் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்த வண்ணம் உள்ளது. இதில் ஏராளமான மரம், செடிகள் தீயில் கருகி நாசமாகின. இந்நிலையில் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நேற்றும் 9வது நாளாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது.
மலைக்கிராமங்களில் காட்டுத்தீ தொடர்ந்து எரிவதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. சில இடங்களில் மரங்கள் எரிந்து சாம்பலாகி கிடக்கிறது. திண்டுக்கல் வனக்கோட்டம், கோவையைச் சேர்ந்த வன களப்பணியாளர்கள், சிறப்பு வன மீட்பு குழு, வனக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதியில் இருந்து தண்ணீர் வாகனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வாகனங்கள் மற்றும் போலீசாரின் வருண் வாகனங்கள் கொண்டு வரப்பட்டு இரவு பகலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தீயை அணைக்கும் பணியைத் திண்டுக்கல் மண்டல வனப்பாதுகாவலர் காஞ்சனா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது... மேல்மலைப் பகுதிகளில் பற்றியக் காட்டுத்தீ நேற்று மாலை வரை 80 சதவீதம் அணைக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும். தொடர்ந்து காட்டுத்தீ எரிந்தால் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் தீ எரிந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தீயினால் வனவிலங்குகள் எதுவும் உயிரிழக்கவில்லை. தற்போது கரும்பாறை என்ற இடத்தில் புகை மண்டலம் சூழந்துள்ளதால் அங்கு 150க்கும் மேற்பட்டோர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பேரிஜம் ஏரி பகுதியில் சாலையோரங்களில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் கோவை மற்றும் வைகை அணைப்பகுதியில் இருந்து தமிழ்நாடு சிறப்பு மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள் உட்பட ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். மின் வயர்கள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார். பேட்டியின் போது மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா, உதவி வன பாதுகாவலர் சக்திவேல், ஆர்.டி.ஓ. சிவராமன், தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதற்கிடையே காட்டுத்தீயை அணைக்கும் பணி நடைபெறுவதால் இந்தப் பகுதிக்கு, சுற்றுலா மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது!