புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த தந்தை பாதுகாப்பு இல்லாத மனநிலை பாதிக்கப்பட்ட தாயுடன் வசிக்கும் மாணவி ஜெயலெட்சுமி.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கிறார். படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு, கலை, இலக்கியம், வினாடி வினா, பொது அறிவு, அறிவியல் கட்டுரைகள் படைப்பு என பன்முகத் தன்மையுடன் சிறந்து விளங்குகிறார். குடியிருந்த வீடும் கஜா புயலில் உடைந்து போனதால் சித்தப்பா கண்ணன் வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்ப அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று அமெரிக்காவில் அடுத்த போட்டியில் கலந்து கொள்ளவும் நாசாவுக்கு செல்லவும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான செலவு தொகை ரூ. 1.69 லட்சத்தை மாணவி ஜெயலெட்சுமியே ஏற்க வேண்டிய நிலை. படிப்ப செலவுக்கே அரசு திறனாய்வு தேர்வு எழுதி அதில் கிடைக்கும் பரிசுத் தொகையையும், விடுமுறை நாளில் முந்திரிப் பருப்பு உடைத்து அதில் கிடைக்கும் கூலியையும் தன் படிப்பு மற்றும் தன் தம்பி படிப்பு செலவுகளையும் பார்த்துக் கொள்ளும் மாணவி எப்படி இவ்வளவு தொகையை திரட்டி அமெரிக்கா செல்ல முடியும். இவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு நக்கீரன் இணையத்தில் அமெரிக்கா செல்லும் அரசுப் பள்ளி மாணவி.. உதவிக்கரம் நீட்டப் போவது யார்? என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். சிலர் மாணவிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் தான் மாணவியின் சாதனையை பாராட்டிய கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். மாணவியை கட்டியணைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர் அமெரிக்கா செல்ல உதவிகள் செய்வதாக உறுதி அளித்திருந்தார்.
அதன்படியே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தொடர்பு கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவிக்கு உதவிகள் செய்ய கேட்டுக் கொண்டார். ஆட்சியரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஓ.என்.ஜி்.சி நிர்வாகம் துணைப் பொதுமேலாளர் (மனிதவளம்) ஜோசப்ராஜ் மூலம் முதல்கட்டமாக ரூ. 65,000- க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி முன்னிலையில் மாணவி ஜெயலெட்சுமிக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பெட்லாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மற்றொரு பக்கம் செய்திகளைப் பார்த்து பலரும் மாணவிக்கு உதவி செய்ய முன்வந்து அவர்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் அந்த மாணவிக்கு ரூ. 75 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. உதவி செய்ய காத்திருக்கும் நல்ல உள்ளங்கள் மாணவி படிக்கும் பள்ளிக்கே சென்று உதவிகளை நேரடியாக செய்யலாம்.