டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இதுவரை எந்தவித பறிமுதல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால், இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு உள்ள தொடர்பு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மக்களவை தேர்தலுக்கு முன்பாக அவர் ஏன் அவசரமாக கைது செய்யப்பட்டார் என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்க வேண்டும். டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்பான வழக்கில் ஆதாரம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால்,கெஜ்ரிவால் வழக்கில் அதுபோன்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் நீதித் துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தவேண்டும். விசாரணையின் தொடக்கத்துக்கும், கைதுக்கும் இடையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி. தனிநபர் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. அதை நாங்கள் மறுக்க முடியாது” என கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.