திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் தங்கபாண்டியன், பாலியல் தொந்தரவு தந்துள்ளார். இதுப்பற்றி விடுதி காப்பாளர்களும் உதவி பேராசிரியர்களுமான மைதிலி, புனிதா இருவரிடம் அம்மாணவி புகார் கூறியும் அவர்கள் தங்கபாண்டியனோடு ஒத்துப்போ என்றதால் அதிர்ச்சியானார். இந்த டார்ச்சர் தொடர்ந்ததால் அந்த மாணவி இதுப்பற்றி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் புகார் தெரிவித்தார்.
புகார் கூறிய மாணவியை மனநிலை சரியில்லாதவர் என கதை ஜோடித்தது கல்லூரி நிர்வாகம். இதற்காக கல்லூரி மாணவ - மாணவிகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டனர். இதுப்பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதியில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலையிட்டு புகார் பதியவைத்தார். இதற்கே 4 மாதங்களாகிவிட்டது.
இதற்கிடையே சம்மந்தப்பட்ட பேராசிரியர் தங்கபாண்டியனை தற்காலிக பணிநீக்கம் செய்த பல்கலைகழக நிர்வாகம், உதவி பேராசிரியர்கள் இருவரையும் அவர்கள் விரும்பிய சென்னை, கோவைக்கு இடமாற்றம் செய்தது. குற்றம் சாட்டிய மாணவியை திருச்சி கல்லூரிக்கு இடமாற்றியது. அந்த மாணவி நான் போய் சேரமாட்டேன், இங்கேயே தான் படிப்பேன் என்றதற்கு அவரை கல்லூரியை விட்டு நீக்கினார் பதிவாளர்.
இதுப்பற்றி அந்த மாணவி திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிபதி மகிழேந்தி, பல்கலைகழக பதிவாளர்க்கு இடப்பட்ட உத்தரவில், அந்த மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். வரும் 19ந்தேதிக்குள் சேர்க்கை நடத்தி அதுப்பற்றிய தகவலை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.