அதிமுக அரசை மத்திய அரசு காப்பாற்றி வருவதால், தற்போது திமுக தலைவர் கலைஞரே முழு செயல்பாட்டுடன் இருந்திருந்தாலும், அரசை கலைக்க முடியாது என திமுக எம்.பி.
டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற கலைஞரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
யார் இருந்தாலும், ’கலைஞர் இருந்தாலும் இந்த ஆட்சி கவிழாது’. காரணம் இந்த ஆட்சியை பாதுகாப்பது மத்திய அரசு. ஆளுநரின் ஆய்வுகள் மூலம், அவருக்கு இந்த அரசின் மீது நம்பிக்கையில்லை என்பது தெரிகிறது.
அவர் இந்த அரசுக்கு கட்டுப்பட்ட அதிகாரியாக சென்று ஆய்வு நடத்துவது வேறு, இந்த அரசாங்கத்தை நியமித்த ஒரு பொறுப்பில் இருப்பவர், முதல்வரை நியமித்த ஒரு பொறுப்பில் இருப்பவர் அவருடைய செயல்பாடுகளை ஆய்வு செய்கிறார் என்றால் அரசியல் சட்டப்படி இது எப்படி சரியாகும்? அவர் நியமித்த அரசாங்கத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது. இது தவறானது. இது தான் திமுகவின் நிலைப்பாடு என்றார்.
இதைதொடர்ந்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் இடையே அதிகாரப்போட்டி நிலவுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்ட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர் ஜெயக்குமார் சமயத்தில் இதுபோல் கருத்துகளையெல்லாம் கூறுவார். அது என்ன அதிகாரப்போட்டி என்று தெளிவுப்படுத்த வேண்டும்.
துரைமுருகன் தான் மு.க.ஸ்டாலினை செயல்தலைவராக முன்மொழிந்தவர். எந்த அதிகாரத்திற்கு அவர் போட்டியிடுகிறார்? சட்டமன்றத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் அதிகாரப்போட்டி எனக் கூறுவது தவறு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.